Sunday, 7 November 2010

உன்னாலே...

காதலும் கவிதையும் உன்னாலே
கனவும் கற்பனையும் அதனாலே
காற்றாய் நீ நுழைந்தாய் என் நெஞ்சிலே
காதலாய் மாறினாய் அஞ்சு நொடியிலே
விதையாய் முளைத்தேன் முதல் பார்வையிலே
மரமாய் வளர்ந்தேன் மறு நாளே

காதலும் கவிதையும் உன்னாலே
கனவும் கற்பனையும் அதனாலே
நிலவாய் நீயும் புகுந்தாய் என் இரவிலே
வெட்கம் கொண்டு ஒளிராமல்
ஒழிந்தாய் யார் நிழலிலே
நீலக்கரு மேகமாய் சூழ்ந்தாய் என் வானிலே
மாரி போல் பொழிந்தாய் கோடையிலே.

Monday, 6 September 2010

மரமாய் நான்...

நீ தினம் கடக்கும் பாதையோர
மரத்தைப்பார்த்து.....
அது உதிர்க்கும் பூக்களை
நீ மிதிக்காமல் எட்டி எட்டி நடந்து செல்லும்போதும்,
மழை ஓய்ந்த பின் குடையின்றி செல்லும் உன்மீது
இலைநீரை அது தெளிக்கும்போதும்,
அதன் கிளைகளை ஸ்பரித்து வரும்
காற்றை நீ சுவாசிக்கும் போதும்,
பொறாமைப்படுகிறேன்
அந்த மரமாய் நான் பிறந்திருக்கலாமே என்று.....

Wednesday, 21 July 2010

காதல் என்றால்...

ஓர் வரட்சியான காலகட்டம் நிலவுகின்றது அந்தக்காட்டில். எங்கும் வரட்சியால் உணவுக்கும் நீருக்கும் பெரும் தட்டுப்பாடு. பல மிருகங்கள் இறந்துகொண்டு வருகின்றது பட்டினியால். இரு மான்கள் சோடியாக காடுமுழுவதும் அலைந்து திரிகின்றன நீருக்காய். சிலநாட்கள் நீரின்றி அலைந்த களைப்புடன் கண்டுவிட்டன ஒரு வற்றிப்போன குட்டையை. அக்குட்டை முழுமையாக வற்றிப்போய் கொஞ்ச நீரே மிஞ்சியிருந்தது. எஞ்சியிருந்த கொஞ்ச வலிமையால் ஓடிச்சென்றன இருமான்களும் குட்டையருகே. நீரில் வாயை வைத்த பின்னர் தான் தெரிந்தது அந்த நீர் ஒரு மானுக்கு மட்டுமே போதும் என்று. பெண் மான் நினைத்தது தான் குடித்தால் எங்கே ஆண் மானுக்கு போதாமல் போய்விடுமோ என்றெண்ணி குடிப்பது போல் பாவனை செய்ய ஆண் மானும் தான் குடிக்காமல் தலையை எடுத்தால் பெண் மான் நீரை குடிக்காது என்றெண்ணி தானும் குடிப்பது போல் பாவனை செய்ய தொடங்கியது.
முடிவாய் ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மானும் பெண் மான் குடிக்கட்டும் என்று ஆண் மானும் நீரை குடிக்காமல் நடித்துக்கொண்டிருந்தன....

***********************************************************

எனது பட்டமளிப்பு விழாவின் திகதி அறிவிக்கப்பட்டது. இப்போது இருக்கும் பொருளாதார பிரட்சினைகளாலும் குடும்ப பொறுப்புகளாலும் அம்மாவையும் அப்பாவையும் விழாவிற்கு அழைப்பது கொஞ்சம் கஷ்டமான விடயமாக இருந்தது. என்றாலும் யாரவது ஒருவரை அழைக்கலாம் என்று எண்ணி அம்மாவை தொலை பேசியில் தொடர்பு கொண்டேன். விழாவிற்கு அம்மா வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். சிறிது நேர உரையாடலின் பின் தான் வரவில்லை அப்பாவை அழைக்குமாறும் சொன்னார்கள். ஏன் என்று கேட்டதற்கு தன்னை விட அப்பா வந்தால் தான் நன்றாக இருக்கும். அவர் தான் நான் நன்றாக படிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தவர் அதோடு அதற்காக மிகவும் பாடுபட்டவர் அவர் தான். அப்பா வந்தால் தன்னை விட அதிக சந்தோசப்படுவார் என்றார்கள் அம்மா. அப்போது அப்பா அருகில் இல்லை அவர் வெளியில் சென்றிருந்தராம். மறுநாள் அப்பாவிடம் தொலைபேசியில் பேசும் பொது அவரை விழாவிற்கு வருமாறு அழைத்தேன். உடனே அவர் அதை மறுத்து தான் வரவில்லை என்றார். நான் நேற்று அம்மா கூறியதை அப்பாவிடம் சொன்னேன். அப்பா உடனே சொன்னார் "உலகத்துல எவ்வளவு பெரிய சந்தோஷமான நிகழ்வா இருந்தாலும் சரி கவலையான நிகழ்வா இருந்தாலும் சரி உன் அம்மா பக்கத்துல இல்லாம அதை என்னால அனுபவிக்க முடியாது". அவர் முடியாது என்று முடிக்கும் முன்னர் என் கண்களில் முட்டி மோதியது நீர்...

Sunday, 18 July 2010

நீ நிலா



உனக்காக காத்திருந்தேன்
ஓரிரவில்
நீ தொலைவாய் நின்றிருந்தாய்
வரவேயில்லை
என்னருகில்
விடிந்த பின் தான்
தெரிந்தது
அது நீயில்லை நிலவென்று...

Wednesday, 7 July 2010

லூசுப்பையன் லூசுப்பொண்ணு

நீண்ட நாட்களாக கண்டது முதல் காதல் கொண்டு அவளின் பின்னால் அலைந்து திரிகிறான் ஒரு லூசுப்பையன். அவளிடம் பலமுறை தன் காதலை சொல்லிவிடுகிறான். ஆனால் அவனை தொடர்ந்து நிராகரித்து வருகிறாள் இந்த லூசுப்பொண்ணு. ஒரு நாள் வழமை போல தன் காதலை சொல்ல அவளை சந்திக்கிறான்...

லூ. பை :- ஹே.. கொஞ்சம் நில்லு. நான் உங்கிட்ட பேசணும்.

லூ. பொ :- ஹையோ... என்ன பேசணும்??? அதே வழமையான பல்லவி தானே...

லூ. பை :- அது இல்ல.. நான் இனிமேல் உன்னை லவ் பண்ணல!

லூ. பொ :- உண்மையாவா சொல்லுறாய்?

லூ. பை :- சத்தியமா சொல்லுறன் நான் இனிமேல உன்னை லவ் பண்ணமாட்டேன்.

லூ. பொ :- அப்பாடா... தொல்லை விட்டது... குட் பாய்.. (நல்ல பையன் இல்லைங்க.. good bye!!)

லூ. பை :- ஆனா நான் உன்னை காதலிக்கிறேன்...

லூ. பொ :- ஐயோ.. கடவுளே நீ உண்மையாவே லூசுதாண்டா

லூ. பை :- எனக்கு உன்மேல லவ் என்றால் நீ என்னை மறுத்த முதல் நாளே நான் உனக்கு நீ சொன்ன அதே good bye ஐ சொல்லிவிட்டு போயிருப்பேன்.
ஆனா இன்னும் உன் பின்னாடி வரேன் என்றால் அது காதலால் தான்...

லூ. பொ :- உங்களை எல்லாம் திருத்த(வே) முடியாது...

லூசுப்பொண்ணு முறைத்துக்கொண்டு செல்வதை வழக்கம் போல பரிதாபமாய் பார்த்துகொண்டிருந்தான் லூசுப்பையன்....!

Thursday, 1 July 2010

எப்போது?

முதலில் கண்ட போதா
முழுநிலவாய் நீ முகமலர்ந்த போதா
முத்துப்பற்களால் நீ சிரித்த போதா
முகம் பார்க்க நீ தலை குனிந்த போதா
முகவரி தொலைந்த பிள்ளை முகம் போல
நீ முழித்துக்கொண்டிருந்த போதா
மூழ்கிப்போனேன் நான் உனக்குள்.......

---------------------------------------------------------------------------

உன் முகம் பார்த்து விழிக்கும் காலைகள்
உன்னோடு ருசிக்கும் தேநீர் மாலைகள்
உன் கைகோர்த்து நடக்கும் சாலைகள்
உன் தோல் சாய்ந்து கிடக்கும் கடற்கரைகள்
எல்லாம் எப்போது தருவாய் என்று காத்திருக்கிறேன்.....


Wednesday, 26 May 2010

ஓவியத்துக்குள் ஓவியம்

நீ தொடு தூரமென்றாலும் உன்னைத்தொட, தொடாமல்
ஏங்கி தவிக்கும் என் விரல்கள்
நீ தொலைவான போது உன்னைத்தொடாமல், தொட
வெட்கி நிற்கும் என் அதே விரல்கள்...

நீ சிரிக்கும் போது உன் எதிரில் சுவர் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள் ஏனென்றால்
நீ சிந்தும் சிரிப்புகள் எதிரொலியாய் சிதறும் போது கதறுகிறது என் மனது
எதை சேகரிப்பது என்று தெரியாமல்.. உன் சிரிப்பையா இல்லை சிவரின் சிரிப்பையா...

இன்னொரு தடவை பூந்தோட்டத்தில் என்னை சந்திக்க வராதே.
நீ சென்ற பின்பும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
நீ அருகிருந்த பூச்செடியிடம் நீயென நினைத்து...

உன்னிடம் நான் ஏதோ ஒன்று குறும்பாய் சொல்ல நீயோ "போடா பொறுக்கி" என்கிறாய்.
நான் ரகசியமாய் நீ சிந்தும் புன்னகை பூக்களை பொறுக்கும் பொறுக்கி என்ற உண்மை உனக்கு எப்படி தெரிந்தது?

ஓவிய கண்காட்சிக்கு சென்ற போது நீ அங்கிருக்கும் ஓவியங்களை பிரமித்து பார்த்துக்கொண்டிருந்தாய். நானோ உன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென என் பக்கம் திரும்பிய நீ சிரித்துக்கொண்டே என்ன என்பது போல் பார்த்தாய். ("ஓவியங்களை விட நீயே அழகாய் இருகிறாய்" என்ற பதிலை நீ எதிர்பார்த்திருப்பாய் போல) "ஓவியத்துக்குள் ஓவியம் இன்றுதான் நான் காண்கிறேன்" என்பதை அறியாத நீ.

புத்தகத்துக்குள் மயிலிறகு வளர்க்கும் சிறுவனிடம் மயிலிறகு ஒன்றை தருமாறு கெஞ்சிக்கொண்டிருந்தேன்.
விசித்திரமாய் பார்த்த நீ எதுக்கு இந்த வயதில் உனக்கு மயிலிறகு என்றாய்?
மயிலிறகால் மை தொட்டு மையலே உன் பெயரெழுததான்..
எங்கே, பேனாவினால் உன் பெயரெழுதினால் உனக்கு வலிக்குமோ என்றுதான் என்றேன்.


Friday, 14 May 2010

அடியா.. கடியா..

வாழ்கையில...
விழுகிற ஒவ்வொரு அடியும்
ஏறிப்போற படி மாதிரி.
எவ்வளவு அடி விழுகுதோ
அவ்வளவு மேல நாங்க போவோம்...
ஆனா இடி விழுந்தா
ஒரேடியா மேல போயிடலாம்!!!

குழம்பின குட்டையில மீன் பிடிக்கமுடியாது என்று சொன்னங்க....
நானும் குட்டை தெளியிர வரைக்கும் காத்திருந்து வலையை விசினேன்.
ஆனால் மீன் பிடிபடவில்லை. கடைசியா ஒரு முடிவுக்கு வந்தேன்.
"மீன் இல்லாத குட்டையிலையும் மீன் பிடிக்கமுடியாது!!!"

முதல் தடவை விமானத்தில் பறக்கும் போது
உயரத்தில் நான் இருப்பதை எண்ணி பெருமை கொண்டேன்.
ஆனால் விமானம் என்னதான் ஆயிரம் அடி உயரத்துல பறந்தாலும்
விமானநிலையம் வந்தா கீழே இறங்கித்தான் ஆகணும்!!!

நேற்று கிடைச்சது இன்னைக்கு கிடைக்காது
இன்னைக்கு கிடைக்கிறது நாளைக்கு கிடைக்கபோறதில்லை
நாளைக்கு கிடைக்கபோறது என்றைக்கும் கிடைத்துக்கொண்டிருக்காது.
அதனால கிடைக்கிறத கிடைச்ச அன்னைக்கே அனுபவிச்சா கிடைச்ச அந்த சந்தோசம் மட்டும் என்னைக்கும் கிடைக்கும்!!!

வாழ்ந்த அனுபவத்தின் மூலம் சொல்பவனின் தத்துவத்தில் பல அடிகள் இருக்கும்
ஆனா சும்மா பொழுது போகாம சொல்லுர தத்துவத்தில் பல கடிகள் தான் இருக்கும்!!!

Monday, 10 May 2010

பூவுக்கே பூச்செண்டா?

காலையில் நீ தினமும் கண்விழிக்கும் போது
கண்ணாடி அணிந்து கொள்.. என்றேன்
ஏன் என்கிறாய்?
வண்டுகளும் தேனீக்களும்
உன் கண்களுக்குள் புகுந்து விடாதா என்ன...

சாலையில் உதிர்ந்து கிடக்கும்
பூக்களை மிதிக்காமல்
நீ எட்டி எட்டி நடந்து வருகிறாய்...
ஆனால் நீயேன் அறியவில்லை
ஒரு பூ மிதித்து இன்னொரு பூவுக்கு எப்படி வலிக்கும் என்று...

உலக சமாதானத்தைப்பற்றி பேசிய ஒருவர் சொன்னார்
உலகத்தை வெள்ளைப்பூக்களால் நிரப்புங்கள் என்று...
மறுநாளே நான் நிரப்பிவிட்டேன்
உனக்கொரு வெள்ளை நிற சுடிதார் வாங்கித்தந்து...

காதலர் தினத்தில் காதலிக்கு பூக்கொடுப்பவர்களை
கண்டு கோவப்பட்டேன் பொறாமையால் அல்ல
பூவுக்கே பூச்செண்டா?

Tuesday, 30 March 2010

பயணம்


மரம் ஓடுகிறது
செடி ஓடுகிறது
புல் ஓடுகிறது
விளக்கு கம்பம் ஓடுகிறது
அருகில் இருக்கும் தண்டவாளம் ஓடுகிறது
அதன் மீது வேறொரு தொடர்வண்டி இன்னும் வேகமாக ஓடுகிறது
நானிருக்கும் தொடர்வண்டி ஓடியும் ஓடாமலும் என்னக்குள்ளே என்னைப்போலவே.......

Monday, 29 March 2010

என்னிடம் இல்லா நாட்கள்


ஹோர்மோன்கள் சீராகத்தான் வேலை செய்கின்றன.
உறக்கமின்றி களைத்திருந்தாலும் உடல் துடிப்பாகவே இயங்குகின்றது.
கண்கள் இரண்டும் சிவந்து வீங்கியிருக்கின்றது.
ஒவ்வொரு கண்ணிமைக்கும் நேரத்திலும் தூங்கி எழுகின்றேன்.
வழமையை விட கண் அதிகமாகவே இமைக்கின்றது.
உண்ணாமலே உடல் உழைகின்றது.
உண்பதற்கு உண்மையிலேயே மறந்துவிட்டேன்.
உண்டியையும் மூச்சுக்காற்றால் நிரப்புகின்றேன்.
இரவையும் பகலையும் பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை.
இரண்டும் கலந்த வினோத நாட்களாக நகர்கின்றன நாட்கள்.
மூளையின் அனைத்து கட்டுப்பாட்டு மையமும்
கட்டுப்பாட்டை இழந்து விட்டது.
கட்டையை சுற்றி வரும் காளை போல
ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றி வருகிறது எண்ணங்கள்.
எல்லாம் எதனால்...

Friday, 26 March 2010

சமாதானம்


உன் மீது காதல் கொள்ளும்

கடலைகள் கூட

ஓடி வந்து உன் காலடி

தழுவிச்செல்லும் போது....

உன்னை ரசிக்கும்

கடற்காற்று கூட

தேடி வந்து உன் கூந்தல்

கோதிச்செல்லும் போது....

நான் மட்டும் எம்மட்டும்

Tuesday, 23 March 2010

தனிமை


நீயும் நானும்


சந்தித்த இடங்களுக்கு


நீயின்றி தனியாக


நான் செல்லும் போது


அங்கிருக்கும் சடங்கள்


எல்லாம் உயிர் கொண்டு


என்னை மிரட்டுகின்றன


ஏன் அவளை தனியே விட்டு வந்தாய் என்று...

Monday, 8 March 2010

காதலை(ப்)பற்றி...

நான் உண்மையிலேயே குழம்பிப்போய்தான் உள்ளேன். காதல் என்றால் என்ன? எப்படி அடையாளம் கண்டு கொள்வது? எப்படி தோன்றுகின்றது? ஏன் தோன்றுகின்றது? யாரிடம் தோன்றுகின்றது? இப்படி நீண்டு கொண்டு செல்லும் கேள்வி பட்டியல் என்னுள் எழுந்து கொண்டிருகிறது...

காதலை பற்றி நான் ஏன் ஆய்வு செய்யணும்? காதல் ஆய்வு செய்ய வேண்டிய விடயமா? அதை அனுபவித்து அதனுடன் கலந்து வாழ்ந்து விட வேண்டிய அனுபவமா? இல்லாவிட்டால் துர நின்று பார்த்து விட்டு செல்லும் காட்சியா?

காதலைப்பற்றி என் அறிவுக்கு எட்டிய தூரம் அல்லது என் பார்வையில் காதல்.... இந்தப்பார்வை அல்லது காதல் பற்றிய எண்ணம் இன்று எனக்கு சரியாக இருக்கலாம். நாளை பிழையாகவோ அல்லது வேறு வடிவமாகவோ மாறிவிடலாம். நேற்றுவரை காதல் என்பது தெரியாத மொழியாகவும் அதைப்பற்றி அதிகளவு தெரியாமலும் இருந்தது.

அதற்காக இன்று நான் காதலில் வீழ்ந்தவன் என்று அர்த்தமில்லை. இப்பொழுது எனக்கு கிடைத்திருக்கும் தனிமையும் நேரமும் எனது வயதும்கூட காதலைப்பற்றி எண்ண என்னை தூண்டியிருக்கலாம்.

யாரிடம்...
நம் வாழ்கையில் தினமும் எவ்வளவோ இடங்களுக்கு செல்கின்றோம். எத்தனையோ மனிதர்களை சந்திக்கின்றோம். அதில் பல மனிதர்களை கண்டும் காணாமல் செல்கின்றோம். சிலரிடம் ஒரு புன்னகையை மட்டும் விட்டு செல்கிறோம். சிலரிடம் சில நாள் பழக்கம். ஒரு சிலரிடம் தொடர்ந்து பழகும் சந்தர்ப்பங்கள்.... இதில் யாரிடம் காதல் தோன்றுகின்றது..

ஒரு கொள்கலனில் அடைக்கப்பட்ட வாயு மூலக்கூறுகளின் இயக்கம் பற்றியும் அவை ஒவ்வொன்றுடன் மோதிக்கொள்ளும் போது இரசாயன தாக்கம் ஏற்படுகின்றது என்ற விஞ்ஞான கொள்கை நிலவுகின்றது. அந்த மூலக்கூறுகள் அவை ஏற்படுத்தும் எல்லா மோதல்களிலும் தாக்கம் ஏற்படும் என்றில்லை. இரு மூலக்கூறுகள் சரியான நேரத்தில் சரியான வேகத்துடன் சரியான பகுதியில் மோதிக்கொள்ளும் போதே தாக்கம் ஏற்பட்டு மற்றைய மூலக்கூற்றுடன் பிணைப்பை ஏற்படுத்தும். பிணைப்பை ஏற்படுத்திய மூலக்கூறு வேறு பல மூலக்கூறுகளுடன் மோதி இருக்கலாம். பிணைப்பை ஏற்படுத்திய மூலக்கூறுடன் ஏற்கனவே மோதலை நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் பிணைப்பை ஏற்படுத்தும் சரியான மோதல் ஏற்படுகையிலேயே தாக்கம் நிகழும்.

மூலக்கூறுகளை காதலராகவும் மோதல்களை சந்திப்புகளாகவும் தாக்கத்தை காதலாகவும் பிணைப்பை பின்னர் ஏற்படும் உறவாகவும் பிரதியிடுப்பார்த்தால்...
இதனையே காதல் யாரிடம் தோன்றுகின்றது என்ற வினாவுக்கு விடையாக கொள்ளலாமா?

நம் காதலராக அமையப்போகின்றவரை காதலுக்கு முன்னர் சில/ பல தடவைகள் சந்தித்து இருக்கலாம். ஆனால் சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருவரது எண்ணமும் ஒருமிக்க சந்தித்து கொள்ளும் போது காதல் என்னும் தாக்கம் ஏற்படுகிறதோ என்று எண்ண தூண்டுகின்றது.

Monday, 15 February 2010

என் மொழி சொல்லும் காதல்

பூ மீது கொண்ட காதலை
காற்று சொல்லிவிடுகிறது தென்றலாய்...
புல் மீது கொண்ட காதலை
இரவு சொல்லிவிடுகிறது பனித்துளியாய்...

புவி மீது கொண்ட காதலை
நிலவு சொல்லிவிடுகிறது பௌர்ணமியாய்...
மண் மீது கொண்ட காதலை
விண் சொல்லிவிடுகிறது மழையாய்...

கரை மீது கொண்ட காதலை
கடல் சொல்லிவிடுகிறது அலையாய்...
கல் மீது கொண்ட காதலை
சிற்பி சொல்லிவிடுகிறான் சிலையாய்...

மொழி மீது கொண்ட காதலை
கவிஞன் சொல்லிவிடுகிறான் கவிதையாய்...
உன் மீது கொண்ட காதலை
நான் சொல்லிவிடுகிறேன் மௌனமாய்...

நீ மௌனம் எனும் மொழி புரிவாயா?
இல்லை என்றால் இதோ
சொல்கிறேன் என் மொழியாய்....

Wednesday, 10 February 2010

கடற்கரை தருணங்கள்


கடற்கரை கோலங்களாக காதலர்களின் கால் தடங்கள் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மாலை நேரம். சேர்ந்து பயணிக்கும் காதல் ஜோடிகளின் கால் தடங்களை கண்டு பொறாமைப்படும் கடலலைகள் அவற்றை எல்லாம் அழித்துவிட கங்கணம் கட்டிக்கொண்டு மணல் தரையில் போராடிக்கொண்டிருந்தது.....

பலபேர் அந்த கடற்கரையில் கூடியிருந்தாலும் ஆயிரம் பேர் என்னை கடந்து சென்றாலும் நான் உன் நினைவுகளோடு தனிமையாகவே உனக்காக காத்திருந்தேன்...

மாலை வானம் தொலை கடல் மீது சாய்ந்து கொண்டு சிவப்பாய் சிவந்துகொண்டிருந்தது...
நேற்று நீ என்தோள் சாய்கையில் உன் வெட்கி சிவந்த முகமே என் முன் காட்சியாய் தோன்றிட எனக்குள்ளே சிலிர்த்துக்கொண்டேன்.

திடீரென இரு கைகள் பின்னால் இருந்து என் கண்களை மூடிக்கொள்ள.....

"உன்னைத்தவிர வேறு யாரும் என் கண்களை மூடப்போவதில்லை எதற்கு இந்த வேண்டா வேலை கவிதா"

என்றபடி கண்களை மூடிய கைகளை விலக்க முயற்சிக்காமலே அமர்ந்திருந்தேன். கைகளை நீயாகவே எடுத்துவிட்டு என் தலையில் ஒரு குட்டு...
மென் கோபம் உன் கண்களில் தெரிந்திட ஓர் அதட்டும் பாணியில் நீ கேட்டாய்....

"யாரவள் எனக்கு தெரியாமல்?"

சிறு ஏளனப்புன்னகையுடன் நான்...

"உன்னைத்தவிர வேறு யாரும் என் கண்களை மூடப்போவதில்லை எதற்கு இந்த வேண்டா கேள்வி"

என்றேன். புரிந்தவளாய், சிணுங்கினாய் நீ... ரசித்தேன்.

"மன்னித்துக்கொள் இன்று 'கொஞ்சம்' நேரமாகிவிட்டது. நீ வந்து கனநேரமோ..?"

"இல்லை இப்பதான் 'கொஞ்ச' நேரம்..... மூன்று மணிக்கு வந்தனான்"

"அடப்பாவி இது உனக்கு கொஞ்ச நேரமோ? ஐந்து மணிக்கு தானே வருவதாய் சொன்னாய்....."

"நீ அருகில் இருக்கும் போது உன்னை நினைப்பதை விட உனக்காக காத்திருக்கும் போதே உன்னை அதிகமா நினைக்கிறேன்..
உனக்காக நீண்ட நேரம் காத்திருக்கலாம் என்றுதான்...."


நீ என்தோள் சாய்கிறாய்...... வானம் சிவந்திருந்தது....

காதல் நோய்கள்



புற்று நோய்
இதயத்தை புற்று நோய்
தாக்குவதில்லை
ஏன் என்றால்
நீ அங்குதான்
தங்கியிருக்கிறாய்...

மாரடைப்பு
என் இதயத்தில்
இருந்த நீ
கடித்து துப்பிய
நகங்கள்
அடைத்துக்கொண்டது
நாளங்களை...

தும்மல்
நீ அருகில்
செல்லும் போது
என் நுரையீரல்
காற்றெல்லாம்
உன் நுரையீரல்
புகுந்து கொள்ள
பேராசைப்படுகிறது...

ஆஸ்துமா
உன் மூச்சுக்காற்று
கலவாத காற்றை
சுவாசிக்கும் போது
என்னை
தொந்தரவு செய்கிறது...

வாந்தி
உன்னை நினைக்காமல்
உண்ட உணவெல்லாம்
சமிபாடு அடையுதில்லை...

மூச்சடைப்பு
என் மூச்சுக்குழாய்
அளவு போதவில்லை
உன்னக்கும் சேர்த்து
நான் சுவாசிப்பதற்கு...

Monday, 8 February 2010

இ. மா. ச. சி. நிபுணன்

இதுவரை நாள் எனக்கு
தெரிந்தது எல்லாம்
இதய மாற்று சத்திர சிகிச்சைதான்
ஆனால் நீயோ எனக்கு
உன்னிதயத்தை தந்து
என்னிதயத்தை நீ எடுத்துக்கொண்டு
இதய பரிமாற்று சத்திர சிகிச்சை
செய்துவிட்டாயே...

மனதில் பதிந்த பாடல் ஒன்று...



பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ


வெய்யோனே என்புருகி வீழ்கின்றோம்
வெந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ
புலம்பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன்கழிந்தோம்
அழுதழுது உயிர்கிழிந்தோம் அருட்கோனே

சோறில்லை சொட்டுமழை நீரில்லை
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே
மூப்பானோம் முன்வளைந்து முடமானோம்
மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே
ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்
ஓரிழையில் வாழிகின்றோம் உடையகோனே


நீராகி ஐம்புலனும் வேறாகி
பொன்னுடலம் சேறாகி போகமாட்டோம்
எம்தஞ்சை யாம்பிறந்த பொன்தஞ்சை
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்
தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய்மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்

பொன்னார் மேனியனே வெம் புலித்தோல் உடுத்தவனே
இன்னோர் தோல்கருதி நீ எம்தோல் உரிப்பதுவோ
முன்னோர் பாற்கடலில் அன்று முழுநஞ்சுண்டவனே
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ

பெம்மானே! பேருலகின் பெருமானே!!
ஆண்டஇனம் மாண்டழிய அருள்வாயோ?

பிரதி எடுக்கப்பட்ட தளம் (http://pachaitamilan.blogspot.com/2009/06/blog-post_24.html)

ஆயிரத்தில் ஒருவன் தமிழ் திரைப்படத்தில் இருந்து...

Sunday, 7 February 2010

காதல் குருடன்

என் கண்ணிமைகளுக்குள் ஒளிந்து கொண்டாயோ...
நான் கண்ணிமைக்கும் கணங்கள் கூட
கண்களுக்குள் கனவாய் வருகிறாயே...

என் கண்ணிமைகள் களவாடி சென்றாயோ...
கண்ணிமைகளை திறந்தாலும் மூடினாலும்
ஒரே காட்சியாய் நீயே தெரிகிறாயே...

என் கண்களுக்கு ஓய்வின்றி போனதுவோ...
கண் விழித்தாலும் அயர்ந்தாலும்
உன் பிம்பத்தையே மூளைக்கு அனுப்புகிறதே...

என் கண்களுக்குள் நீ விழுந்துவிட்டாயோ...
கண்கள் வேறு காட்சி காணாமல்
மறைத்து நிற்கிறாயே...

என் கண்கள் என்ன தவம் செய்ததுவோ...
உன் உருவம் கண்டு
பிறந்த பயன் அடைந்து விட்டதுவே...

என் கண்கள் இனி குருடாய் போனாலும்
அவை அனுப்பிய உன் பிம்பம்
என் உடலின் ஒவ்வொரு செல்களிலும்
அழியாச்சுவடுகளாய்....

Thursday, 4 February 2010

குட்டுப்பட்ட கூட்டம்!!

குட்ட குட்ட குனிந்தது ஒரு கூட்டம்
குட்டப்பட்ட கூட்டம் எழுந்தது ஒரு கட்டம்!

திடுக்கிட்டது குட்டிய கூட்டம்
தீட்டியது பல சதித்திட்டம்!

உடைத்தெறிந்தான் திட்டமெல்லாம்
குட்டுப்பட்ட கூட்டத்தில் ஒருவன்!

தளரவில்லை குட்டுப்பட்ட கூட்டம்
மீண்டும் மீண்டும் எழுந்தது!

விட்டுவிட்டது குட்டுவதை குட்டிய கூட்டம்
விடவில்லை தொடர்ந்து குட்டும் எண்ணத்தை!

மீண்டும் குட்டினால்
குட்டுப்பட்ட கூட்டம் வீழ்ந்துவிடுமா?
இல்லை எழுந்து வருமா?

சி(க)ல்லறைக்கனவு

சில்லறைகள் கல்லறை வரை வருவதில்லை...
ஆனால்
சில்லறைகளால் சில்லறைத்தனமானவர்கள்
கல்லறை வருவார்கள்!!!

சில சில்லறை சேர்ப்பவர்கள்
கல்லறை சேரப்போவதை மறந்தவர்கள்...
அவர்கள்
சில்லறைகளால் எதையும் செய்ய நினைப்பவர்கள்
ஆனால்
கல்லறைகளை அவர்கள் தவிர்த்துவிட முடியாது!!!

சில்லறைகள் என்றும் நிலைப்பதில்லை
கல்லறைகளே நிரந்தரமானவை...
சில்லறைகள், கல்லறை போகும் பாதையில்
சிதறி கிடக்கும்
சிற்றின்பமே...
அது கல்லறை வரை வரும் என்று
சில்லறைத்தனமாக கனவு காணாதே!!!

Thursday, 28 January 2010

வருடத்தில் ஒருநாள்

என்னை முதன் முதலாய் உன் மடியில் தாலாட்டியவள் நீ
உன்னை முதன் முதலாய் தாலாட்டிய நாள் இன்றல்லவா..

என் மொழி

தினம் என் மனதில் தோன்றும் எண்ணங்கள் ஆயிரம். அவை காலத்திற்க்கு ஏற்ப வடிகட்டிய பின்னர் என் கருத்துகளாக மனதில் தேங்கிவிடும். சில எண்ணங்கள் மீட்டிப்பாக்காத போது மறந்துவிடுகின்றது. அவற்றில் சில வார்த்தைகளாக இன்னும் சில எழுத்துக்களாக மாறுகின்றது. அதுவே என் மொழியாகின்றது.

Monday, 25 January 2010

காதல் கோடு

கல் மீது எறும்பு ஊர்ந்த கோடு போல
என் காதல் ஆனதுவோ....?

கல்லிற்கு எறும்பு ஊர்வது தெரிவதில்லை
எறும்புக்கு தான் கல்மீது போடும் கோடும் தெரிவதில்லை...
அதுபோலவே
தினம் நீ என்னை கடந்து சென்ற போதும் காதலில்லை
என்மீது நீ போட்ட காதல் கோடு உனக்கும் தெரியவில்லை
உன்னை சில நாள் காணாத போது உன்மீதிருக்கும் காதல்,
கல்மீது எறும்பு போட்ட கோடு போலல்லவா
என்மனதில் அழியாமல் இம்சிக்கின்றது!!!

நீயும் நானும்

நான் தாமரையானால் நீ சூரியனாகிவிடாதே...
தவளையாகிவிடு
உன்னை என் இலைகளில் தாங்கிடுவேன்

நான் மண்ணாகினால் நீ விண்ணாகிவிடாதே...
மேகமாகிவிடு
நீ மழையாய் பெய்யும் போது என்னுள் ஊறிவிடுவாய்

நான் நீரானால் நீ ஆறாகிவிடாதே...
குளமாகிவிடு
நான் ஓடிக்கொண்டிராமல் உன்னுள்லேயே தேங்கிடுவேன்

நான் கடலானால் நீ காற்றாகிவிடாதே...
உப்பாகிவிடு
என்னுள் நீ என்றும் கரைந்திருப்பாய்

நான் பழமானால் நீ பறவையாகிவிடாதே
வண்டாகிவிடு
எனக்குள்ளே நீ வாழ்ந்திருப்பாய்

நான் நீயானால் நீ நானாகிவிடாதே...
என் தாயாகிவிடு
அடித்தாலும் அணைத்தாலும்
உன்னைவிட்டு என்றும் பிரியேன்...!